இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்தியா வந்துள்ள ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாயைச் சந்தித்து உரையாடியப் பின்னர் கருத்து வெளியிட்ட இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், தமது பிராந்தியத்தைப் பீடித்துள்ள பயங்கரவாதம் தொடர்பில் ஒளிவுமறைவு இல்லாத விவாதங்களையும் விவரங்களையும் கர்சாயுடன் தான் பகிர்ந்துகொண்டதாகக் கூறினார்.பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் இந்தியா ஆப்கானிஸ்தானிடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்குரிய முக்கிய கூட்டுறவு ஒப்பந்தத்தில் இவ்விருநாடுகளின் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
பிராந்தியத்தில் அமைதியையும் சமாதானத்தையும் மேம்படுத்துவதற்காக இந்தியா முயற்சிகள் எடுத்துவருவதாகக் கூறி ஆப்கானிய அதிபர் கர்சாய் நன்றி தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானுக்கு பெருமளவில் உதவி வழங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தாதுப் பொருள் வர்த்தகம், ஹைட்ரோகார்பன் உற்பத்தி போன்றவை தொடர்பில் இரு நாடுகளும் புதிய ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளன.
இந்தியாவின் நெடுநாள் வைரியான பாகிஸ்தானுடன் ஆப்கானிஸ்தான் பாராட்டிவந்த உறவு, அண்மையில் ஆப்கானிஸ்தானில் வரிசையாக நடந்த தாக்குதல்களை அடுத்து கணிசமாக மோசமடைந்துள்ளது.
பின்னணி
ஆப்கானை இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தனது பின்புலப் பகுதியாக பாகிஸ்தான் கருதுகிறது. எனவே இந்தப் பகுதியில் இந்தியாவின் தலையீடு தனக்கு பிரச்சனைகளை உண்டாக்கும் என்று அது கருதுகிறது.
அதிபர் கர்சாயோ பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்பட்ட நிலையில் டில்லிக்கு வந்துள்ளார்.
"அமைதி குறித்து பேசிக்கொண்டே பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது. அது இரட்டை வேடம் போடுகிறது" என்று கர்சாய் வெளிப்படையாக குற்றம்சாட்டியதயன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மோசமடைந்தன.
ஆப்கானிஸ்தான் தனது எதிர்காலத்தை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியாவுடன் இணைந்து திட்டமிட்டு உருவாக்கும் என்றும் கார்சாய் கூறியிருந்தார். இந்தப் பின்னணியில் ஆப்கானில் இந்தியா ஒரு பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று இந்தியாவில் உள்ள சிலர் கருதுகின்றனர்.
இந்தியாவும் தனது பாதுகாப்பு தேவைகளைக் கருத்தில்கொண்டே ஆப்கானுடனான தனது உறவை முன்னேடுக்கிறது. இந்தியா பொருளாதார உதவிகளை அளிப்பதன் மூலமாகவும், கலாச்சாரத் தொடர்புகளை வலுவாக்குவதன் மூலமாகவும் தனது செல்வாக்கை அதிகப்படுத்த முனைந்து கொண்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்ப அழைக்கப்பட்ட பிறகு அங்கே ஒரு உள்நாட்டுப் போர் வெடிக்கும் இதன் காரணமாக தீவிரவாதிகள் அந்நாட்டு எல்லையைக் கடந்து வருவார்கள் என்று இந்தியா அஞ்சுகிறது. இந்த நிலையில் கார்சாய் அவர்களின் இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை கணிசமாக மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானும் இடையே போட்டி நடக்கும் இடமாக ஆப்கானிஸ்தான் மாறிவிடுமோ என்ற அச்சமும் சில மட்டங்களில் உள்ளது.
0 comments:
Post a Comment