அஸ்ஸலாமு அழைக்கும்! www.ybsguys.blogspot.com இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... குர்ஆன் வசனம் : "எந்த ஒரு சமுதாயத்தவரும் தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்லாத வரையில் அல்லாஹ் அவர்களை மாற்றுவதில்லை"! . அல்-குர்ஆன்: 13 :11

வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் மறுவாழ்வுக்கு அரசு உதவ வேண்டும் !அப்துல் ரஹ்மான்.எம்.பி



 













துபாயில் 2-வது உலக தமிழர் பொருளாதார மாநாடு கடந்த 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை வெகு சிறப்பாக நடைபெற்றது.
துவக்க விழாவில் மாண்புமிகு மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி அவர்கள் மாநாட்டினைத் துவக்கி வைத்து விழாப் பேருரை நிகழ்த்தினார்.
விழாவில் மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு, இந்திய தூதர் எம்.கே. லோகேஷ், இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி, ஈடிஏ அஸ்கான் மேலாண்மை இயக்குநர் சையத் எம். ஸலாஹுத்தீன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். அப்துல் ரஹ்மான் ( வேலூர் ), அழகிரி ( கடலூர் ), ராஜ்யசபா உறுப்பினர் ஜின்னா, மலேசிய துணைத் தூதர் சம்சுதீன்,
தோஹா வங்கி தலைமை நிர்வாக அதிகாரி சீத்தாரமன், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். இலட்சுமணன், இந்தியா கிளப் சேர்மன் சித்தார்த் பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு கருத்தரங்குகள் நடைபெற்றன.
இந்த மாநாட்டில் 'அரசாங்க உதவிகளும் சமூக ஒருங்கிணைப்பும்' எனும் தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு மொரீஷியஸ் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் தன் தாய்மொழியாம் தமிழில் உரை நிகழ்த்துவதை பெருமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசியதாவது,

எம்.பி.க்கள் நலத்திட்டத்தின் கீழ் ரூ. 5 கோடியை எங்களது கையில் தந்துவிடுவதாக மக்கள் நினைக்கின்றனர். அதுஅப்படியல்ல. மக்களின் நலத்திட்டங்களான கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கத் தான் இந்த நிதி ஒதுக்கப்படுகிறது.

சீன கப்பல் மாலுமியினை ஜப்பானில் கைது செய்தபோது சீன அரசு அக்குடிமகனை விடுவிக்க மேற்கொண்ட முயற்சி, பாகிஸ்தானில் 2 அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்ட போது அந்நாடு மேற்கொண்ட முயற்சியையும் பார்த்தோம். இந்நிலையில் நமது இந்திய அரசு நமது சகோதர இந்தியர்கள் ஆஸ்திரேலியாவிலும், அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பாதிக்கப்படும் போது எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டது எனபதனை நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன். ஒரு சில எச்சரிக்கை அறிவிப்புகளோடு அவை நின்று விடுவது வருந்தத்தக்கது.

இலங்கையில் தமிழர்களது மறுவாழ்வுக்காக இந்திய அரசு வழங்கிய நிதி எந்த அளவுக்கு பயன்படுத்தப்பட்டது எனபது கேள்விக்குறியே?

இந்தியர்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்து தாய்நாட்டிற்கு அனுப்பும் அந்நியச் செலாவணி அரசுக்கு ஒரு முக்கிய வருவாயாகும். இப்படிப் பாடுபடும் இந்தியர்கள் தாய்நாடு திரும்பினால் அவர்களது மறுவாழ்வுக்கு அரசு எத்தகைய திட்டங்களை தீட்டியுள்ளது எனபதை நாம் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறையின் மூலம் ஓய்வூதியம், காப்பீடு எனப் பல்வேறு திட்டங்கள் குறித்துப் பேசினாலும் அவை இன்னும் செயல்வடிவம் பெறாதது வருத்தத்திற்குரியது.

தாய்நாட்டுக்காக தியாகம் செய்திடும் வெளிநாடு வாழ் இந்தியர்களது மறுவாழ்வுக்கு அரசு உதவிட வேண்டிய தருணம் இது.

துபாய் இந்திய கன்சல் ஜெனரல் ஆதரவுடன் செயல்பட்டு வரும் இந்திய சமூக நல மையம் மூலம் மேற்கொண்டு வரும் சேவைகள் அளப்பரியது. இது போன்ற மையங்களை இந்தியர்கள் வாழ்ந்து வரும் பல்வேறு நாடுகளிலும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டும் இன்னும் அவை செயல்வடிவம் பெறாதது வருத்தத்திற்குரியது.

எது எப்படியிருப்பினும் சாதி, மதம், இனம் என எவ்வித வேறுபாடும் காட்டாது இந்தியர் எனும் உணர்வோடு தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய வாய்ப்பினை இம்மாநாடு ஏற்படுத்தும் என நம்புகிறேன் என்றார்.

அதனைத் தொடர்ந்து ராஜ்யசபா உறுப்பினர் ஏ.ஏ. ஜின்னா, சென்னை தமிழ் வணிக அமைப்பின் தலைவர் சோழ நாச்சியார் ராஜசேகர் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

'வணிக வாய்ப்புகளும் சட்டத்துறைப் பணிகளும்' எனும் தலைப்பிலான கருத்தரங்கிற்கு நீதியரசர் ஏ.ஆர். இலட்சுமணன் தலைமை தாங்கினார். 'இந்தியாவிலும், வளைகுடா நாடுகளிலும் முதலீட்டு வாய்ப்புகள்' எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு தோஹா வங்கி தலைமை நிர்வாக அதிகாரி ஆர். சீத்தாராமன் தலைமை தாங்கினார். ஆந்திர அரசு தொழில் துறை ஆணையர் கரிகால்வளவன், ஆஸ்திரியா டாக்டர் வி. ஜெபமாலை, பாரதியார் பல்கலைக்கழகத்தின் முனைவர் பி. முனியாண்டி, மாஸ்கோ ஆர். பாஸ்கரன் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

'வணிகத் தொடர்புக்குத் தமிழ் மொழியும், வணிகத் தொழில் நுட்பமும்' எனும் தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் உலகநாயகி பழனி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முனைவர் கே. திலகவதி, ராணிமேரி கல்லூரி முனைவர் இராஜேஸ்வரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் எழிலரசி பாலசுப்பிரமணியன், கவிதா தேவர், பிரேமா, வசந்தாள், முனைவர் அல்போன்ஸா, முனைவர் மரிய தெரசா, டி. தங்கமணி, ஆசிப் மீரான் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

விழாவின் இறுதியில் மத்திய இணை அமைச்சர் நாரயணசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தகவல்: முதுவை ஹிதாயத்

0 comments:

Post a Comment